Site icon பாமரன் கருத்து

ஆர்கே நகர் தேர்தல் முடிவு – முழு அலசல்

களம் கண்டவர்கள் :

முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பிறகு ஆர்கே நகரில் இடைதேர்தல் நடைபெறுகிறது .
சசிகலா – தினகரன் அணிக்கும் , OPS – EPS அதிமுக அணிக்கும் இடையில் யார் உண்மையான அதிமுக , அதிமுக தொண்டர்கள் யாரை ஆதரிக்கிறார்கள் என்பதை நிர்ணயிக்கும் தேர்தலாக இந்த இடைதேர்தல் நடக்கிறது .

இதற்கு இடையில் பாஜகவின் கைப்பாவையாக செயல்படும் ஆளும் அரசின் மீதான வெறுப்பையும், இரு அணிகளாக பிரிந்து வலிமையிழந்து இருப்பதையும் சாதகமாக்கிக்கொண்டு திமுகவே எல்லாவற்றிற்கும் மாற்று என்பதையும் ,அடுத்தது ஆட்சி அமைக்கப்போவது தாங்கள்தான்  என்பதையும் மக்களுக்கு உணர்த்த வெற்றி பெற வேண்டிய முனைப்போடு திமுக களம் கண்டது .

புதிய கொள்கைகளை கொண்ட நாம் தமிழர் கட்சியும் , மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவும் தனித்தே களம் கண்டன .

தேர்தல் செயல்பாடுகள் :

தினகரன் அணியினர் வழக்கம்போல தாங்கள்தான் வெற்றிபெறுவோம் என கூறிக்கொண்டு தேர்தல் வேலையில் ஈடுபட்டனர் . அவர் செல்லும் இடங்களில் மக்கள் கூட்டமும் அலைமோதியது . ஆனால் அதனை கண்டவர்களும் எதிரணியினரும் தினகரன் வெளியூரில் இருந்து கூட்டம் கூட்டுகிறார் என்றனர் .

திமுக இமாலய கூட்டணியை அமைத்தது . இந்த தேர்தலில் ஜெயித்தே தீருவோம் என்கிற முழக்கத்தோடு அனைத்து கட்சியினரின் ஆதரவோடு வாக்கு சேகரித்தனர் . திமுக இந்தமுறை வாக்குக்கு பணம் கொடுப்பதில்லை என்கிற கொள்கை முடிவோடு களம் கண்டது .

இதர கட்சிகளும் சுயேட்சைகளும் தங்களுக்காக வாக்கு சேகரித்தன .

தேர்தலுக்கு முந்தைய கணிப்புகள் :

தமிழகத்தில் நிலவும் ஆளும் அரசின் மீதான வெறுப்பும் உட்கட்சி உரசல்களும் திமுகவிற்க்கே வெற்றிவாய்ப்பினை பெற்றுத்தரும் என பரவலாக மக்கள் பேசிக்கொண்டனர் .

லயோலா கல்லூரி முன்னால் பேராசிரியர் ஒருவர் நடத்திய கருத்து கணிப்பில் சுயேட்சை வேட்பாளர் தினகரனுக்கே மக்களின் ஆதரவு அதிகமாக இருக்கின்றது என்று கணித்தார் .

தேர்தல் முடிவுகள் :

யாரும் எதிர்பார்க்காதது போல , கருத்து கணிப்பில் வந்த ஆதரவை விட அதிகமாக மக்களின் ஆதரவை பெற்று மிகப்பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் . அதிமுகவின் வேட்பாளர் மதுசூதனன் தவிர அனைவரும் டெபாசிட் இழந்தனர் .

தோற்ற திமுக வியூகம் :

மக்கள் பரவலாக வெல்லும் என நினைத்த திமுக இந்த தேர்தலில் டெபாசிட் இழந்தது . இதற்கு காரணமாக பலர் கூறுவது திமுக நட்சத்திர வேட்பாளரை நிறுத்தாதது , தொகுதியில் சரியாக வேலை செய்யாதது , கூட்டணி கட்சிகளின் வாக்குகளை சிதறாமல் பார்த்துக்கொள்ளாதது என பல காரணங்களை சொல்கின்றனர் .

வென்றே ஆக வேண்டிய சூழ்நிலையில் இருந்த திமுக இத்தனை அஜாக்கிரதையாக இருந்தது என்பதனை நம்ப முடியவில்லை .

தினகரன் வென்றதற்கு ஸ்டாலினின் வியூகம்தான் காரணம் என்கிறார்கள் . அவரால் மட்டுமே அதிமுகவை எளிதில் கலைத்துவிட முடியும் என்பதாலேயே திமுக தொகுதி வேலைகளில் அவ்வளவு அக்கறை காட்டாமல் இருந்தது என்கிறார்கள் சிலர் .

ஆனால் அவர்களுக்கும் ஸ்டாலினுக்கும் ஒன்றினை நினைவு படுத்தலாம் . திமுகவை வீழ்த்துகின்ற வல்லமைகொண்டவரும் தினகரன் தான் . ஸ்டாலினின் வியூகம் இதுவென்றால் பாம்புக்கு பால் வார்த்த கதைதான் நடக்கும் .

பணம் மட்டுமே வெற்றியை கொடுக்க வாய்ப்பில்லை :

தினகரன் அணியினரும் அதிமுக அணியினரும் பணம் கொடுத்தே இந்த வெற்றியை பெற்றனர் என்று கூறுகின்றனர் தோற்ற மற்ற கட்சிக்காரர்கள் .

ஆனால் தினகரன் அடைந்திருப்பது மாபெரும் வெற்றி , அத்தனை ரெய்டுகளுக்கு பின்னரும் 89000 பேருக்கு கொடுக்கும் அளவிற்கு தினகரனிடம் பணம் இருந்திருக்குமா என்பது கேள்வியே ?

மேலும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகளை மீறியும் அவ்வளவு பேருக்கும் பணம் விநியோகம் செய்வது என்பது மிக கடினம் .

புரிந்துகொண்ட மக்கள் புரிந்துகொள்ளாத கட்சிகள் :

பல கட்சிகள் இந்த தேர்தலை பல நோக்கங்களுக்காக சந்தித்தன . ஆனால் ஆர்கே நகர் மக்கள் இந்த தேர்தல் எதற்க்கானது என்பதனை முழுமையாக அறிந்துகொண்டே செயல்பட்டு இருக்கிறார்கள் .

இந்த தேர்தல் உண்மையான அதிமுக யார் என்பதற்கு தீர்வாக அமையும் என்பதனை மக்கள் உணர்ந்துகொண்டனர் அதனாலயே அவர்கள் திமுகவை புறம்தள்ளினர் .

மேலும் பணம் கொடுத்து மக்களை எவரும் இக்காலத்தில் விலைக்கு வாங்கிட முடியாது . அவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முதலில் தீர்மானித்து விடுகிறார்கள் . பிறகு பணம் வாங்கும் போது அவர்கள் தங்கள் முடிவை மாற்றிக்கொள்வது இல்லை . வாரி சுருட்டியதைத்தானே
கொடுக்கிறார்கள் வாங்குவதில் தவறில்லை என்பதாலேயே பலர் வாங்குகின்றனர் .

தினகரனின் இந்த வெற்றி என்பது ஆர்கே நகருக்கு மட்டுமானது . தற்சமயம் தமிழகத்தில் தேர்தல் நடந்தால் வேறு முடிவுகளே வரும் .

நன்றி
பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version