Site icon பாமரன் கருத்து

அவளும் என் தங்கை தான்

அவள் குழந்தை பருவத்தில்
கைகளை பிசைந்து அழுதபொழுது
ஆடி பாடி நான் விளையாட்டு காட்டியதில்லை!

நான் வைத்து விளையாடிய
மர யானை பொம்மை கேட்டு
அவள் அழுததில்லை!

மூன்று வயதில் அம்மா இல்லாதபோது
அவள் அழகு முகத்தில்
வழிந்தோடிய மூக்கினை
நான் துடைத்ததில்லை!

அவள் நடை பழகியபோது
பிஞ்சு கை விரல் பிடித்து
மூன்று சக்கர நடை வண்டியில்
நடக்க வைக்க வில்லை!

பள்ளிக்கு செல்லும் வயதில்
உன் கைகள் பிடித்து
பள்ளிக்கு சென்றதில்லை
கடைவீதியில் உன்னோடு
சாலை கடந்ததுமில்லை!

உன் மழலை தமிழையும்
கை வீசம்மா கை வீசு
யானை பெரிய யானை பாடல்களையும்
கை விரல்களால் நீ கூட்டல் கணக்கு
போடும் அழகையும் அருகில் இருந்து
நான் ரசித்ததில்லை!

நான் கல்லூரி விடுதிக்கு செல்லும் போது
அப்பா அம்மாவுடன் உன் கண்ணீர்
துளிகளை உதிர்க்கவில்லை!

என் முதல் மாத சம்பளத்தில்
எனக்கு இது வேண்டும்
எனக்கு அது வேண்டும் என்று
அன்பு தொல்லை தந்ததுமில்லை!

ஒன்றாக பிறந்து
ஒன்றாக வளர்ந்து
என்னுடனே வீட்டில் இருந்திருந்தால் தான் அவள் என் தங்கையா!!!

ஒன்றாக பிறக்காமல்
ஒன்றாக வளராமல்
ஒரே வீட்டில் என்னோடு இல்லாமல்
இருந்திருந்தாலும் கண்டவுடன்
சகோதர பாசம் தந்த அவளும்
என் தங்கை தான் !!!

ஸ்ரீ 
Exit mobile version