பெரியார் உண்மையை உணர்ந்த அந்த தருணம் | Periyar

ஒரு நிகழ்வு, அதில் எழும் கேள்வி, கிடைக்கும் பதில் இவை தான் வரலாற்றை மாற்றுகிற நட்சத்திரங்கள் உருவாக காரணமாகின்றன. பெரியார் சாதிய கட்டமைப்பை எதிர்த்து வலிமையோடு போராடிட அவருக்கு நடந்த இரண்டு சம்பவங்கள் போதுமானவையாக இருந்தது எனலாம்.
பெரியார் உண்மையை உணர்ந்த அந்த தருணம்


மூட நம்பிக்கையை பகுத்தறியாமல் பின்பற்றியதாலேயே உழைப்பாளி அடிமையாகவும் சோம்பேறி ஆண்டானாகவும் இருக்கும் நிலை ஏற்பட்டது. முன்னோர்கள் செய்து வைத்ததை மாற்றக்கூடாதே என நினைப்பவர்கள் கோழைகளேயாவார்கள் , முன்னோர்களை விட நாம் அதிக புத்திசாலிகளே. நம்மைவிட நமக்குப்பின்னால் வருகிறவர்கள் இன்னும் அனுபவசாலிகளே – பெரியார்

 

சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்களை அந்நிலையிலிருந்து மீட்க பகுத்தறிவு என்னும் பேராயுதத்தை ஏந்தி வந்த இராமசாமி எனும் பெரியார் ஒரு வசதியான மேல்தட்டு குடும்பத்தில் பிறந்தவர். பெரியார் பற்றிய செய்திகளை வாசிக்கும்போது ஒரு உயர்ந்த சாதியில் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்த ஒரு பிள்ளையால் எப்படி ஏழை எளிய மக்களின் வலியை உணர முடிந்தது? தான் சார்ந்த மேல்தட்டு மக்களையே எதிர்க்க துணிந்தது எப்படி?  சாதியின் கொடுமையை எந்த தருணத்தில் பெரியார் உணர்ந்திருப்பார்? என்ற கேள்விகள் எழுந்ததுண்டு. அதற்கான பதிலை அமரர் கே பி நீலமணி என்பவர் எழுதிய “தந்தை பெரியார்” என்ற புத்தகத்தில் படித்தேன். அதைத்தான் இந்தப்பகுதியில் உங்களோடு பகிர்ந்துகொள்ள இருக்கிறேன். 

 

இராமசாமியின் பெற்றோர்கள் மிகவும் நல்லவர்கள், ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்திடும் பேருள்ளம் கொண்டவர்கள் ஆனாலும் பிறரைப்போலவே அவர்களிடத்திலும் அந்த எண்ணம் ஒட்டிக்கொண்டு தான் இருந்தது. அவர்கள் இராமசாமி தாழ்த்தப்பட்டவர்களின் குழந்தைகளோடு பழக்கூடாது, அவர்கள் கொடுப்பதை உண்ணக்கூடாது என்றே வலியுறுத்தி வந்தனர். ஆனால் இராமசாமிக்கு அதில் உடன்பாடில்லை. பெற்றோர் எத்தனை அறிவுரைகள் கூறினாலும் அவர் தலையில் ஏறவே இல்லை, அங்கு தான் பகுத்தறிவு பிறக்க தயாராகிக்கொண்டு இருக்கிறதே பிறகெப்படி ஏறும். 

 

இனி அமரர் கே பி நீலமணியின் கட்டுரைக்குள் போகலாம்..

பெரியார்

 

தான் சலீமின் வீட்டில் பிரியாணி சாப்பிட்டதையும் தனது அம்மாவிற்கு சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதனால் அவர்களின் அருகே சென்றுவிடக்கூடாது என்று எண்ணிக்கொண்டும் நடந்துவந்தார். அவர் ஒதுக்குபுறமாக இருந்த குடிசைகளின் நடுவே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது ஒரு சிறுவனின் பயங்கரமான அழுகுரல் கேட்டது. 

 

“என்னை அடிக்காதேம்மா என்னை அடிக்காதேம்மா நான் இனிமே அந்த அய்யா கூட பேசல, விளையாடப்போகல” என அந்த சிறுவன் அலறிக்கொண்டு இருந்தான். 

 

உள்ளே போகலாமா வேண்டாமா என எண்ணிய இராமசாமி கதவை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தார். உள்ளே அடிவாங்கிக்கொண்டு இருந்தது தன்னோடு சேர்ந்து விளையாடும் தனது நண்பன் காளி. 

 

அந்த அம்மையாரின் கைகளில் இருந்த சுள்ளியை பிடுங்கிக்கொண்டு காளியை மீட்டார் இராமசாமி. பார்ப்பதற்கு பெரிய இடத்து பிள்ளையைப்போல இருக்கவும் காளியின் அம்மாவும் வாயடைத்துப்போனார். 

 

யார் இந்த பெரிய இடத்து பையன் என கண்களாலேயே தனது மகன் காளியை நோக்கினாள் தாய். காளி இப்போது மிகவும் சந்தோசமாக ” இவருதாம்மா என்னோட சிநேகிதரு நம்ம அப்பா கூட இவங்க பண்ணைலதாம்மா வேலை பாக்குறாரு, சின்ன எசமான் ரொம்ப நல்லவரும்மா” என சொல்லி முடித்தான் காளி. 

 

பதறிப்போன காளியின் தாய் “பெரியநாயக்கர் அய்யா வீட்டு புள்ளையா நீங்க? ” என்று அலறினாள். 

 

இராமசாமிக்கு சூழல் நன்றாக புரிந்துவிட்டது. தன்னோடு சேர்ந்து விளையாடுவதனால் தான் காளி அடி வாங்குகிறான் என்பதும் நன்றாகவே விளங்கியது. 

 

“சின்ன எசமான் நீங்க எங்க தெருவுக்குள்ள எங்க வீட்டுக்குள்ள வரலாங்களா…எங்க புள்ளைய கூட சேர்ந்து விளையாடலாங்களா” என்றாள் பயந்தபடி 

 

“இதுல என்னம்மா தப்பு இருக்கு, காளி என்னோடு சிநேகிதன், நான் அவன்கூட பழகினத்துக்கு அவன் கூட சினேகமாக இருந்ததுக்கு ஏன் அவன இப்படி அடிக்கிறீங்க?” என இராமசாமி கேட்டார். 

“எசமான் நீங்க சின்னப்புள்ள, உங்களுக்கு இதெல்லாம் புரியாது. நாங்க கீழ்சாதிக்காரங்க, நீங்க எங்க எடத்துக்கெல்லாம் வரக்கூடாது. பெரிய எசமானுக்கு தெரிஞ்சா எங்கள கொன்னே போட்டுருவாரு” 

 

“நீங்க கீழ்ச்சாதினு யாரு சொன்னா, அதெல்லாம் நம்பாதீங்க” என்றார் இராமசாமி

 

“எசமான் நாங்க கீழ்ச்சாதினு இந்த ஊர் சொல்லுது, உலகம் சொல்லுது, எல்லாத்துக்கும் மேல காலம்காலமா தீண்டப்படாதவங்கனு வாழுற எங்க பொறப்ப பத்தி எங்களுக்கு தெரியாதா” என்றார் காளியின் அம்மா 

 

“எசமான் இங்க இருந்து சீக்கிரமா போயிருங்க, இனிமே என் மவன் கூட சேராதீங்க யாராவது இவன உங்ககூட பாத்தா இவன் அப்பாவுக்குத்தான் கஷ்டம் வரும்” என காளியை கட்டிக்கொண்டே அழுதாள். 

 

இனிமேலும் இங்கிருப்பது அவர்களுக்கு மேலும் சங்கடத்தைத்தான் தரும் என்று எண்ணிய இராமசாமி  “எனக்கு ரொம்ப தாகமா இருக்கு குடிக்க கொஞ்சம் தண்ணி இருக்குமா?” என்றார் 

 

“ஐயோ தண்ணியா கேக்குறீங்க?” என்று தயங்கியபடி தாய் கேட்க 

 

“ஏன் தண்ணி இல்லையா” என்றார் இராமசாமி 

 

“பானை நெறைய தண்ணி இருக்கு ஆனா உங்களைப்போல பெரிய மனுசங்களுக்கு தவிச்ச வாய்க்கு தண்ணி கொடுக்க முடியாத பாவி நாங்க” என்றார் தாய் 

 

“நீங்க இங்க என் கையால தண்ணி வாங்கி குடிச்சது தெரிஞ்சா இந்த தெருவையே கொளுத்திருவாங்க” என அஞ்சிக்கொண்டே கூறினார் காளியின் தாய் 

 

அங்கும் இங்கும் சுற்றிப்பார்த்தார் இராமசாமி. பின்னர் ஒரு மூலையில் இருந்த பானையில் அலுமினிய டம்ளரால் தண்ணீரை அருந்திவிட்டு வெளியே வந்தார். 

 

அந்த வழியாக வந்தவர்கள் தலையில் கட்டியிருந்த முண்டாசை அவிழ்த்து கக்கத்தில் வைத்துக்கொண்டனர். காலில் இருந்த செருப்பை கழட்டிவிட்டு வணக்கம் வைத்தனர். 

 

இவர்களின் இந்த செய்கைகள் தனது குடும்பத்தின் மீதான அன்பினாலோ அல்லது மரியாதையாலோ அல்ல, அப்படி இருந்தால் கூட பரவாயில்லை. இவர்களின் ஒட்டுமொத்த உழைப்பையும் பயன்படுத்திக்கொண்டு அவர்களை மட்டும் தீண்டத்தகாதவர்கள் என முத்திரை குத்தி ஒதுக்கி வைத்திருக்கும் மேல் சாதிக்காரர்களிடம் இருக்கின்ற பயமே காரணம் என புரிந்துகொண்டார் இராமசாமி.

 

கீழ்சாதிக்காரர்களுக்காக பேசுகிறவர்கள் நல்ல உள்ளம் படைத்தவர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் சாதியால் வன்கொடுமைக்கு ஆளாகிறவர்களின் மன துயரத்தை அவர்களை தவிர வேறொருவரால் உணரவே முடியாது. பிறகெப்படி இராமசாமி க்கு அவர்களின் வலி துல்லியமாக புரிந்தது. இதற்கான காரணத்தை அடுத்த நிகழ்வில் நாம் புரிந்துகொள்ள முடியும். 

 

இராமசாமி ஒருமுறை தனக்கு பாடம் நடத்திடும் வாத்தியார் வீட்டு வழியாக நடந்து செல்கிறார். அப்போது மிகவும் தாகமாக இருந்ததனால் வாத்தியாரின் வீட்டிற்கு சென்று தண்ணீர் கேட்கிறார். அப்போது அங்கு வந்த வாத்தியாரின் மகள் செம்பு நிறைய தண்ணீர் கொண்டு வந்தாள். 

 

அதை வாங்க கை நீட்டியபோது கைகளில் கொடுக்காமல் தரையில் வைத்தாள். தண்ணீரை குடிக்க துவங்கும் போது ” எச்சில் படமா தூக்கி குடியுங்கள்” என்றாள். குடித்து முடித்த பிறகு அந்த டம்ளரில் மூன்று முறை தண்ணீரை ஊற்றி சுத்தமாகிவிட்டது என்றெண்ணிய பிறகே உள்ளே கொண்டு சென்றாள். அதை வாத்தியாரின் மனைவியும் அருகே நின்று பார்த்துக்கொண்டு இருந்தார். 

 

அப்போது இராமசாமி “கூனிக்குறுகி போனார்“. 

கருஞ்சட்டைப்பேரணி

 

இப்படித்தான் ஒவ்வொருவரும் சாதியால் தங்களை உயர்ந்தவராகவும் மற்றவரை தாழ்ந்தவராகவும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என சிந்தித்தார் இராமசாமி. நம் வீட்டில் நம்மை விட கீழ்சாதிக்காரர்கள் என ஒரு சமூகத்தை ஒதுக்குகிறார்கள், இன்னொரு வீட்டில் நம்மையே கீழ்சாதிக்காரன் என ஒதுக்குகிறார்கள் என சாதியின் அடிப்படையை புரிந்துகொண்டார். 

 

இந்த நிகழ்வுகளில் தான் பெரியார் உண்மையை உணர்ந்திருப்பார் என நான் நம்புகிறேன். 

 

இதே போன்றதொரு அனுபவம் நிச்சயமாக அப்போதிருந்த பெரிய மனிதர்களுக்கு ஏற்பட்டிருக்கத்தான் செய்யும். அவர்களில் பலர் அதில் லயித்திருக்க பலர் அதை அப்படியே விட்டுவிட இராமசாமி என்ற ஒரு சிறுவன் மட்டும் தான் தன்னுடைய வாழ்வின் லட்சியமாகவே சாதியத்தை எதிர்ப்பதை மாற்றிக்கொண்டான்.

 

இதுபோன்ற கட்டுரைகளை உங்களது வாட்ஸ்ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்து இணைந்திடுங்கள்


Get updates via WhatsApp

எங்களது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்தும் நீங்கள் பின்தொடரலாம்







எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published.